நிறைய பேர் கூட்டணிக்கு அழைத்தனர்... நான் மறுத்துவிட்டேன்...! - சீமான் பேச்சு
பல பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், அதனை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம், அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், திராவிடம் என்றால் என்ன என்றே திமுகவில் இருப்பவர்களுக்கு தெரியாது. நம் இனத்துக்கு வரலாறு என்பது கிடையாது, வரலாறு படைப்பவர்களுக்கு ஏது வரலாறு என்று பிரபாகரன் ஒருமுறை தெரிவித்தார்.
பல லட்சம் சொற்களை கொண்ட மொழி தான் தமிழ்மொழி. அதனை ஒழிக்க பலர் முற்படுகின்றனர். தமிழ் மொழி படித்தால் வேலை கிடைக்காது, சாப்பாடு கிடைக்காது என சொல்பவர்களைக் கண்டால் கடும் கோபம் வருகிறது. தன்மானத்திற்காக உயிரை விட்ட இனம் தான் தமிழ் இனம்.
இதையும் படியுங்கள் : விழிப்புணர்வு தரும் துர்கா பூஜை பந்தல்கள்
மாட்டுக்கறியை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும். சாதியை ஒழிப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மட்டும் தான் அனுப்பி வருகிறார். தெருவுக்கு தெரு அரசின் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது?
எத்தனையோ பேர் என்னை கூட்டணிக்கு அழைத்தனர். அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன். நான்கு சீட்டுக்காக கட்சியை விற்பவன் நான் அல்ல” என்று தெரிவித்தார்.