“லோகேஷ் கனகராஜுக்கு எதுவும் தெரியாது” - த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கம்!
நடிகை த்ரிஷா தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு தாம் தான் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு சமூக வலைத்தளங்களிலும் சினிமா துறையினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கண்டனங்கள் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடிகர் மன்சூரலிகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
பீகாரில் எடுக்கப்பட்டது போல சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டும். அப்படி நடந்துவிட்டால் வேலையின்மை ஒழிந்து விடும். இதை மறுக்க என் மீது தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது. நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடிகர் சங்கம் முடிவு செய்துவிட்டது.
மக்களுக்கு நான் யார் என்பது தெரியும். நடிகை த்ரிஷா இனிமேல் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் அளவுக்கு சென்று விட்டது. இதற்காக எனக்கு சந்தோசம் தான்.
பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் பெண்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். அது தொடர்பாக எந்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோல நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை.
நடிகர் சங்கம் வெளியிட்ட செய்தி அறிக்கையை நான்கு மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு போட வேண்டும்.
நான் தவறாக எதுவும் பேசவில்லை. எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது.
என் மீது யார் அவதூறு பரப்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.
மன்சூர் அலிகானை சாதாரணமாக நினைத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். ஒரு நடிகனின் கதாபாத்திரமாகத் தான் நான் அதைச் சொன்னேன். நான் பாராட்டும் விதமாகவே அதைச் சொன்னேன்.
மரியாதையாக பேச எனக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம். நான் மிக மரியாதையாகப் பேசத் தெரிந்தவன். நாங்கள் அடுத்த படத்திலே இணைந்து நடிப்போம். நடிகர் சங்கம் 4 மணி நேரத்தில் என்னைப் பற்றி வெளியிட்ட செய்தி அறிக்கையை திரும்பப்பெறவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் இப்பொழுதே என்னுடைய விஸ்வரூபம் வெளிப்படும்.