மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!
மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு:-
இந்த மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 247 விண்ணப்பம் கிடைத்தது. அதில் 190 நபர்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த நிவாரண திட்டங்களை பொறுத்தவரை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 534 குடும்பங்களில் 84 குடும்பங்கள் இதுவரை மாஞ்சோலையை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.
மனுதாரர்கள் :-
வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கான வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பிற அடிப்படை விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாடு என்ன என்பது இதுவரை அரசு தெரிவிக்கவில்லை. மேலும் 144 குடும்பங்களுக்கு இன்னமும் வீடு கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்?.
தமிழக அரசு:-
நிவாரண நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். மேலும் மாஞ்சோலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது தொடர்பாக ஏற்கனவே தெரிவித்தோம். எனவே அந்த 84 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
நீதிபதிகள்:-
மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும்.