தொடரும் #ManipurViolence - பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. ஆனாலும் முழுமையாக மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.
இந்த சூழலில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் போரோபேக்ரா பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகளுக்கு தீயிட்டு எரிப்பது போன்ற நடவடிகைகளில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டதாகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை முகாம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குகி-சோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலைப்பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் புதிய வன்முறை சம்பவங்கள் பல நிகழ்த்தப்படுவதாகவும், ஆயுதம் ஏந்திய குழுக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களை விரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அஸ்ஸாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப் மற்றும் போலீசார் அடங்கிய படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இம்பால் உள்பட பல்வேறு இடங்களில் மோதல்கள் நடப்பதாகவும், போலீஸார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவும் பல இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.