விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் - தேமுதிக சார்பில் விரைவில் அமைக்க உள்ளதால் தகவல்.!
தேமுதிக சார்பில் விஜயகாந்த்திற்கு விரைவில் மணிமண்டபம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து சரியாக 2.45 மணி அளவில் தீவுத்திடலில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபுறமும் நின்று விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. நினைவிடத்தை சுற்றி, தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இன்றும் தேமுதிக தலைமை கழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.