ரகசியங்களை சுமந்து வரும் 'மண்டாடி' - சூரியின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!
காமெடியனாக தனது கரியரை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் நடிகர் சூரி. இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன், சூரி இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் சூழலிலும் எப்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காமெடியனாக நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன்' படத்தில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கி இருந்தார். இனிமேல், ஹீரோவாக மட்டுமே நடிங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, 'கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதனையடுத்து, இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் சூரி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, சூரியின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'மண்டாடி' என பெயரிடப்பட்டுள்ளது. அதனுடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.