மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் - கஞ்சி தொட்டியை திறந்து போராட்டம்!
மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்களில் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.
ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத மக்களை வெளியேற்றக் கூடாது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்களில் கடந்த மாதம் முதலே வேலை இல்லாமல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால் தமிழ்நாடு அரசின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் தங்களது வறுமை நிலையை எடுத்துச் சொல்லும் வகையில் கஞ்சித் தொட்டியை திறந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று ஊத்து தேயிலைத் தோட்ட கிராமத்தில் மக்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டியை திறந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.