CAA குறித்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சை பேச்சு - அரசியல் தலைவர்கள் கண்டனம்..!
குடியுரிமை திருத்த சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
CAA என்றால் என்ன?
2019 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசால் குடியரசு திருத்த சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.
எப்போது நிறைவேறியது..?
குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . இதையடுத்து இந்த சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.
ஒரு வாரத்தில் CAA நிறைவேற்றம் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். மக்களவை அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் :
உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக பாஜக மீண்டும் சிஏஏ விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் அதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டைகளை வழங்கி, பொறியில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். அத்தகைய அட்டைகளை ஏற்று கொள்ள வேண்டாம்.” என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் :
“ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த மசோதா சட்டம் ஆனதற்கு முழு முதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுக-வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் குடியுரிமை திருத்த சட்டத்தை கால்வைக்க விடமாட்டோம் “ இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.