Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

08:00 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை வைத்து வந்துள்ளது. 2011 -2016 வரை நான் இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் இக்கோரிக்கையை முன்வைத்து பல முறை சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளேன். அப்போதிருந்த அதிமுக அரசு இக்கோரிக்கையை ஏற்க மறுத்தது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்திலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக அவரிடம் நேரில் இக்கோரிக்கையை முன் வைத்த போதும் கூட அவர் இதற்குச் செவிசாய்க்கவில்லை. திமுக ஆட்சி மலர்ந்த பிறகு நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நீண்ட காலச் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாகப் பரிசீலனை செய்வதற்கு நீதியரசர் ஆதிநாதன் குழுவை முதலமைச்சர் அமைத்தார். இதன் பிறகு நீதியரசர் ஆதிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் 20 முஸ்லிம்கள் உட்பட 49 நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து அது தொடர்பான கோப்புகளை ஆளுநருக்குக் கடந்த ஆகஸ்ட் 24. 2023 அன்று அனுப்பியது.

இந்த கோப்புகள் உட்படத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் உட்படப் பல கோப்புகளை ஆளுநர் ஆர். என். ரவி கிடப்பில் வைத்திருந்தார். நீண்ட காலச் சிறைவாசிகள் உட்பட மாநில அரசின் கோப்புகளை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஆளுநர் அவர்கள் 10 முஸ்லிம்கள் உட்பட 17 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலைக்கான கோப்பில் கையொப்பமிட்டுள்ளார்.

எம் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இன்று 10 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையின் சுவாசத்தை அனுபவிக்க வழிவகுத்த தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக ஆட்சியில் சாத்தியமாகாதது திராவிட மாதிரி ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது.

17 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை கோப்பில் கையெழுத்திட்ட தமிழ்நாட்டின் ஆளுநருக்கு எமது நன்றி. எஞ்சிய 9 முஸ்லிம்கள் உள்பட 32 நீண்ட காலச் சிறைவாசிகளின் விடுதலை கோப்பில் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Tags :
#manithaneya makkal katchi#MMKAnna Birth DayCMO TamilNaduCoimbatoreJawahirullahLife time PrisonersMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPrisonersPuzhalReleasevellore
Advertisement
Next Article