மகர விளக்கு பூஜை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!
சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.16) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பக்தர்களை கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்களுக்கு பிறகு 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்கான மகரஜோதி தரிசனம் இன்று (15.01.2024) மாலை நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : “வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு அயோத்தி ராமர் கோயில் கட்டியதை சாதனையாக காட்ட நினைக்கிறது!” – டி.ஆர்.பாலு
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் நேற்று (14.01.2024) செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் கூறியதாவது:
"சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், கொல்லத்தில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06032) இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் மாலை 5 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதில் 8 குளிர்சாதன பெட்டிகள், 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுண், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.