மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!
நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் மக பிஹு பண்டிகைகளின் புனிதமான தருணத்தில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். இந்த பண்டிகைகள் நமது கலாசார, பாரம்பரிய அடையாளங்களைக் காட்டுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள் இயற்கையுடனான நமது இணக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன.
பயிர்களுடன் தொடர்புடைய இந்த விழாக்கள் மூலம், தேசத்திற்கு உணவளிக்க அயராது உழைக்கும் கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். இந்த பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழுமையையும் கொண்டு வரட்டும், மேலும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக உற்சாகத்துடன் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.