சபரிமலையில் புதிய கட்டுப்பாடுகள்! வரும் 10 ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் முறை ரத்து!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி பூஜைக்கு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நிறைவுப் பெற்று நடை மூடப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்பட்டது.
ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : “எனது மாணவ குடும்பமே...!” - பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி பூஜைக்கு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10-ம் தேதி முதல் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தவிர பம்பா மற்றும் நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான அனுமதி ரத்து செய்யபட்டுள்ளது.
மேலும், ஜனவரி 14ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 15ஆம் தேதி 40 ஆயிரம் பேருக்கும் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி செய்யபட்டுள்ளது. மேலும் 10ம் தேதி முதல் முன் பதிவு செய்த டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.