மஹுவா மொய்த்ராவின் வழக்கு - ஜன. 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.
அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை தனது நாடாளுமன்ற கணக்கின் உள்நுழைவின் மூலம் கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதற்காகவே மஹுவா மொய்த்ரா தன் இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது.
மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.
முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.