மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில் 9,70,25,119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனா உத்தவ் அணி 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இதையும் படியுங்கள் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.