Maharashtra Election | முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் , பாஜக தோல்வியடைந்ததா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘FACTLY’
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலேகான் மத்திய தொகுதி, மன்குர்த் சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் NDA மற்றும் காங்கிரஸ் இரண்டும் தோல்வியடைந்தன என சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகின. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலேகான், சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் NDA மற்றும் காங்கிரஸ் இரண்டும் தோல்வியடைந்ததாக சமூக ஊடக தளங்களில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்த தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை 51% க்கும் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பாக மாலேகான் சென்ட்ரல், மன்குர்த் சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கு என இடங்களைக் குறிப்பிடுகின்றன.
உண்மை சரிபார்ப்பு :
2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணிக் கட்சிகள் மஹாயுதி கூட்டணியாகப் போட்டியிட்டன, அதே நேரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) , சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்), ஆகியோர் ஒன்றிணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியின் கீழ் போட்டியிட்டனர் . இதேபோல பாரதிய ஜனதா கட்சி தலைமையில் போட்டியிட்ட மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே பிரிவு) 57 இடங்களிலும், என்சிபி (அஜித் பவார் பிரிவு) 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகளை உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் ECI இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தோம். தரவுகளின்படி, மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் AIMIM கட்சியின் முப்தி முகமது இஸ்மாயில் அப்துல் காலிக் 162 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவர் 109,653 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் மகாராஷ்டிராவின் இந்திய மதச்சார்பற்ற அசெம்ளி கட்சியின் ஆசிப் ஷேக் ரஷீத் 109,491 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இஜாஸ் பாய்க் அஜீஸ் பாய்க் 7,527 வாக்குகள் பெற்று நான்காவது இடத்திலும், அதன் கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதி வேட்பாளர் ஷான் இ ஹிந்த் நிஹால் அகமது 9,624 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் ஷேக் ரஷீத், பின்னர் தனது சொந்த கட்சியான மகாராஷ்டிராவின் இந்திய மதச்சார்பற்ற அசெம்ப்ளி கட்சியை நிறுவுவதற்கு முன்பு என்சிபியில் சேர்ந்தார் . மேலும், இந்த தொகுதியில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை.
இதேபோல மன்குர்த் சிவாஜி நகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அபு அசிம் ஆஸ்மி 54,780 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அதன் கூட்டணி கட்சியும், மகா விகாஸ் அகாடியின் உறுப்பினருமான சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகிய இரண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தன.
பிவாண்டி கிழக்கு தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ரைஸ் கசம் ஷேக் 119,687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அதன் கூட்டணி கட்சியும், எம்.வி.ஏ உறுப்பினருமான சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான சிவசேனா (ஷிண்டே பிரிவு) இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 67,672 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதேபோல மாலேகான் அவுட்டரை ஷிண்டே சிவசேனாவின் தாதாஜி தக்து பூசேயும், சிவாஜி நகர் பாரதிய ஜனதா கட்சியின் சித்தார்த் அனில் ஷிரோலேயும் வென்றனர். இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மாலேகான் சென்ட்ரலில் மட்டுமே போட்டியிட்டது மற்றும் மன்குர்த் சிவாஜி நகர் அல்லது பிவாண்டி கிழக்கில் போட்டியிடவில்லை என்பது தெளிவாகிறது.
மேற்சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மாலேகான் சென்ட்ரலில் போட்டியிடவில்லை, அதே சமயம் காங்கிரஸ் கூட்டணியான சமாஜ்வாதி கட்சி மன்குர்த், சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலேகான் மத்திய தொகுதி, மன்குர்த் சிவாஜி நகர் மற்றும் பிவாண்டி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் NDA மற்றும் காங்கிரஸ் இரண்டும் தோல்வியடைந்தன என சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகின. உண்மை சரிபார்ப்பில் 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், AIMIM வெற்றி பெற்ற மாலேகான் சென்ட்ரலில் BJP மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை. காங்கிரஸ் மாலேகான் சென்ட்ரலில் மட்டுமே போட்டியிட்டது மற்றும் மன்குர்த் சிவாஜி நகர் , பிவாண்டி கிழக்கில் போட்டியிடவில்லை, ஏனெனில் அதன் கூட்டணி கட்சி மற்றும் மகா விகாஸ் அகாடியின் உறுப்பினரான சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. இந்த இரண்டு இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. எனவே, பதிவில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது.
Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.