ஜூலை 12-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது ‘மகாராஜா’ - லேட்டஸ்ட் அப்டேட்!
மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
எனினும், படம் வெளியாகி 18 நாட்களை கடந்தபோது உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்தது. இந்நிலையில் தான் ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி (ஜூலை 12) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம், தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பார்க்கலாம் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.