சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறும் நிலையில், அப் பதவிக்கு ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த 2023 ஏப்ரல் 19-ம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 28-ம் தேதி தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிட்டதட்ட ஓராண்டு பணியாற்றிய கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் (24-ம் தேதி) முதல் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.மகாதேவன் பின்னணி:
சென்னையில் 1963ஆம் ஆண்டு பிறந்த ஆர்.மகாதேவன், 1989-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள ஆர்.மகாதேவன் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இவர் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தவர். மே 22, 2024-ல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை மறுநாள் (24-ம் தேதி) முதல் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.