#Madurai மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் எனும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் விதமாக இந்த தேர் திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மதுரை மீனாட்டி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர தேர் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக சுந்தரேசுவரர்- பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் சப்பர தேர்களில் எழுந்தருளினர். இவ்விழாவில் அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது என்பது தனிச்சிறப்பாகும். அதன்படி, அம்மன் எழுந்தருளிய சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுந்தரேசுவரர்- பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் மதுரையின் நான்கு வெளி வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அப்போது சிவாச்சாரியர்கள் பலரும் வீதிகளில் அரிசியை தூவிக்கொண்டே வந்தனர். அப்போது, கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. இந்த தேர் திருவிழாவின் போது ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கீழமாசி வீதியில் வழியாக யானைக்கல், வெளி வீதிகளை சுற்றி மீண்டும் தேர் கோயிலை வந்தடைந்தது.