மதுரை சித்திரை திருவிழா - வைகையில் இன்று நீர்திறப்பு!
மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே
எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
வழக்கமாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து ஆண்டு தோறும் நீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத்
திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காகவும், கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகளின் நீர் ஆதாரத்தை
பெருக்குவதற்காகவும் வைகை அணையில் இருந்து இன்று 08.05.2025 மாலை 6:00 மணி முதல் 12.05.2025 காலை 6 மணி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வைகை ஆற்றில் இருந்து இன்று மாலை நீர் திறந்து விடப்பட உள்ளது.
இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 55.32 அடியாகவும், நீர் இருப்பு 2770 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை நகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.