மு.க.முத்து மறைவு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மு.க.முத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "முத்தமிழறிஞர் கருணாநிதி - தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.
இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.