“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு!
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறும் மாநாட்டின் நிறைவு நாளான இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கேரள முன்னாள் அமைச்சர் எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்கு பிறகு கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது பொதுச்செயலாளராகவும், சிபிஐ(எம்)-ன் 6வது பொதுச் செயலாளராகவும் பேபி உள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு, மத்தியக் குழு கூடி கூட்டம் நடத்தி பொதுச் செயலாளரை தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு சீதாராம் யெச்சூரி இறந்ததைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.