மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.
இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 17) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 67வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் படிக்கல் டக் அவுட் ஆகி வெளியேறினார். மார்கஸ் ஸ்டொய்னிஸுடன் கரம் கோர்த்த கே.எல்.ராகுல் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். இதனிடையே ஸ்டொய்னிஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹூடேவும் 11ரன்களுக்கு நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல் மற்றும் பூரான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தியது. பூரான் 29 பந்துகளுக்கு 75 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கே.எல்.ராகுலும் 55 ரன்கள் எடுத்து பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்களை இழந்து 214 ரன்களை குவித்தது.
215 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஓப்பனர்களான ரோஹித் சர்மா - டெவால்ட் ப்ரெவிஸ் ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றியது. ரோஹித் 38 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். ப்ரெவிஸ் 23 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஏமாற்றவே இஷன் கிஷன் 14 ரன்கள், ஹர்திக் பாண்டியா 16 ரன்கள், நேஹல் வதேரா ஒரு ரன் என மும்பை அணி முக்கியது.14வது ஓவரில் களமிறங்கிய நமன் திர் அட்டகாசமாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரி என 68 ரன்களை குவித்து ஸ்கோரை ஏற்றினார். இப்படியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தின் முடிவில் நமன் திர், ஷெஃபர்ட் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.