ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் ஆம்பூரில்
இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பேர்ணாம்பட்டில் இருந்து தோல் ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து மற்றும் லாரி முன்பக்கம் நொறுங்கியது.
சாலை வளைவு பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் வலது புறமாக திரும்பி உள்ளது. இதை அரசு பேருந்து ஓட்டுநர் கவனித்த நிலையில், விபத்தை தவிர்க்க பேருந்தை சாலையின் இடது புறமாக திருப்பியுள்ளார். இதில் பேருந்தின் வலது புறமாக பக்கவாட்டில் பயணிகள் அமர்ந்திருந்த பகுதியில் நேரடியாக மோதிய லாரி பேருந்தை சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு பேருந்தை பின்னோக்கி இழுத்துச் சென்றதில் சாலை ஓரத்தில் இருந்த தோல் தொழிற்சாலை காம்பவுன்டின் மீது பேருந்து மோதியது.
விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா, நடத்துனர் குணசேகரன், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உபேஷ் மற்றும் பேருந்தில் பயணம் செய்த காலனி தொழிற்சாலை தொழிலாளர்கள் முகமது ஆசிப், மகாலிங்கம், டெல்ஷாப் ,ராதிகா, ரீனா ரோஜா, பிரியா, ரஞ்சனி, சசிகலா, ஜெய்ஸ்ரீ, தீபா, இளமதி, ஜெயக்கொடி, சாதியா உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடக்கும் முன்பே முன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காயமடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் லாரி ஓட்டுநர் உபேஷ் மற்றும் பெண் தொழிலாளர்கள் ரஞ்சனி, சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் ஆம்பூர் பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.