புளியரை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் : தொடரும் போக்குவரத்து நெரிசல்!
தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில், கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இந்த கனிம வள லாரிகளில் ஒரு சில லாரிகள் சட்ட விரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்களை கடத்திக் கொண்டு செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரு கல் கூட தமிழக அரசு அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லப்படவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஏராளமான கனரக வாகனங்கள் வழக்கத்தை விட அதிகமாக கேரளாவை நோக்கி கனிம வளங்களை ஏற்றி கொண்டு சென்றன.
தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியான புளியரை வழியாக
ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வரும் நிலையில், இந்த கனிம வள லாரிகளால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வருகிறது. சோதனை சாவடியில் உள்ள காவலர்கள் இந்த வாகன நெரிசலை சரி செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் சாலையில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஏராளமான வாகனங்களில் கனிம வளங்களானது டன் கணக்கில் கேரளாவிற்கு நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இதே நிலை நீடித்தால் எதிர்வரும் காலத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை வளம் என்பது இல்லாமலே போய் விடும் என்கிற அபாய சூழ்நிலை தற்போது நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.