லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்..!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
கந்தசஷ்டி திருவிழா பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை
சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். பக்தர்களின் அரோகரா பக்தி முழக்கம்
விண்ணை முட்டியது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின்
ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13 -ம் ஆம் தேதி யாகசாலை பூஜையுடன்
தொடங்கியது. தொடர்ந்து ஏழு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று கோவில் கடற்கரையில்
கோலாகலமாக நடைபெற்றது.
விரதம் மேற்கொண்டனர். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற
பழமொழிக்கேற்ப சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்
என்பது நம்பிக்கை.
மேலும் உடல் நலம், தொழில் வளம், உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மையாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் நாள்தோறும் காலை யாகசாலை பூஜை நடைபெற்று சவாமி ஜெயந்தி நாதர்க்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி தங்கத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து யாகசாலை மண்டபத்தில் காலை 6-00 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் பாலித்தார். தொடர்ந்து திருவாடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து மாலை மாலை 4.00 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுவாமி ஜெயந்திநாதர், முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார்.
மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு விண்ணை பிளக்கும் அரோகரா பக்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து கடலில் புனித நீராடிய பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்துகொண்டனர்.
தொடர்ந்து நாளை இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம்
நடைபெறுகிறது. சூரம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சால்பில் குடிநீர் , கழிப்பறை உட்பட பல்வேறு அடிப்படை
வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துளும் சென்னையிலிருந்து சிறப்பு இரயிலும்
இயக்கப்பட்டது.