ஜூன் 24ல் கூடுகிறது மக்களவை - அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!
மக்களவைக் கூட்டம் ஜுன் 24 ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த 9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், ஜுன் 24ம் தேதி மக்களவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைக் கூட்டம் வரும் 24ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற அலுவலர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த மக்களவைக் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு, மக்களவை சபாநாயகர் தேர்தல் உள்ளிட்டவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 264வது மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 27 தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.