மக்களவை தேர்தல் வெற்றி பரிசு - நாதகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!
நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகள் பெற்றதையடுத்து நாம் தமிழர் கட்சியை அதிகாரப்பூர்வ மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த விவரம் நாம் தமிழர் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த நிலத்தில் உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை தர முடியாது எனவும் அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். அல்லது பேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும்.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.