நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை அதற்கான பணியை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊரிலும், தொடர்ந்து 3 வருடம் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் 30-ம் தேதிக்குள் 3 வருடம் முழுமையாக முடித்தவர்களின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பதவி உயர்வு பெற்றும் சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலவரையில் பணியில் இருந்தால் அவர்களுக்கும் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அடுத்தடுத்து டக் அவுட் – 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!
மேலும் உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கணினி வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், சிறப்பு பிரிவுக்காகவும் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்த பணியிட மாற்றத்திற்கு உட்படுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்த கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.