நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆவேசம் - உறவினரை வெட்டிக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை. இவருக்கு முத்துக்குமார், மாரிமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். முத்துக்குமார் நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் நிலையில், மாரிமுத்துவிற்கு பாப்பாக்குடி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த உமாசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து கோரி, மாரிமுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு மாரிமுத்து ஒரு நாள் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த உமா செல்வியின் தந்தையான மாரியப்பன் மற்றும் அவரது சகோதர்களான லண்டன் துரை, சுடலைமணி ஆகிய மூவரும் சேர்ந்து மாரிமுத்துவின் தந்தையான சுப்பையா என்ற துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலைவழக்கு தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. சுப்பையா என்ற துரையை வெட்டிப் படுகொலை செய்த 3 நபர்களுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் உத்தரவு பிறப்பித்தார்.