ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா காந்தி பதிவு!
இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளனர்.
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, 3-ம் கட்டத்தில் குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு இன்று (மே 7) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் 120 பெண்கள் உள்பட 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தன்னுடைய பதிவில்,
“இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு. உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், இது சாதாரண தேர்தல் அல்ல, இது ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில்,
“நாட்டு மக்களே, இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல். இது வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், நிறுவன ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தோற்கடிப்பதற்கான தேர்தல். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. ஆழ்ந்து சிந்தித்து, உங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி வாக்களியுங்கள். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.