Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்... வெற்றிவாகை சூடுவோம்" - தொண்டர்களுக்கு #EPS மடல்!

அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம், வெற்றிவாகை சூடுவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
03:54 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் நாளை (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிலையில், எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது,

Advertisement

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், கோடானு கோடி எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும், அனைத்துத் தமிழர்களுக்கும், எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது, ஒரு மகிழ்ச்சியையும், உணர்வுப்பூர்வமான அனுபவங்களையும், தாய்மைப் பாசத்தையும், கருணையையும், மனித நேயத்தையும், மானுடப் பற்றையும் மலரச் செய்யும் பொன்னாள் தான் இந்நாள். "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும்.

அந்த அளவிற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதராக, திரைத் துறையில் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாகத்தில் ஆட்சி செய்யும் நல்இதயம் படைத்த தீரமும், வீரமும் கொண்டு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றிவாகை சூடும் சாதனையாளராக, இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது என்று அவருடைய எதிரிகளும் தங்கள் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்; இதுபோன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே 'எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின்' என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும்; ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம்.

எம்.ஜி.ஆர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான், ஜெயலலிதாவிற்குப்பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின்; ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.

ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கட்சி உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article