"அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்" - தவெக தலைவர் விஜய் வாழ்த்து !
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், த.வெ.க. தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தய குடியரசு தினத்தில், அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.