"தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப்பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற 'வைக்கம் போராட்டம்' நூற்றாண்டு சிறப்பு விழாவில், தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம் என முதலமச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற 'வைக்கம் போராட்டம்' நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை" வெளியிட்டார். அந்த நூற்றாண்டு புத்தகத்தை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.
அந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இந்த நாட்டு மக்களின் சமூகநீதியை நிலைநிறுத்தவும் தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல. அவற்றில் மிக முக்கியமானது வைக்கம் போராட்டம் ஆகும். அத்தகைய வைக்கம் வீரர் பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரின் வெற்றிப் போராட்டங்களில் ஒன்றான வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்தது. 1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அப்போராட்டம்.
வைக்கம் போராட்டம் நடந்தது மொத்தம் 603 நாட்கள். இதில் 141 நாட்கள் தந்தை பெரியார் அவர்கள் பங்கெடுத்தார்கள். அதில் 74 நாட்கள் சிறையில் இருந்தார்கள்.
மகத் போராட்டத்தைத் தொடங்கிய அம்பேத்கர் தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார். அதன் பிறகுதான் தமிழ்நாட்டில் ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றன.
தந்தை பெரியார் மறைந்த போது, கருனாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில் - 'பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம். தொடர்வோம்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.