தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்படும் சிறுத்தைகள்!
தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானாவிலிருந்து இரண்டு கட்டங்களாக எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக 4 சிறுத்தைகள் மே மாதத்திற்குள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் அறிக்கையின்படி, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் முன்னிலையில், சிறுத்தைப்புலிகள் திட்டம் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் கென்யாவிலிருந்து இந்தியாவிற்கு அதிகமான சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எட்டு சிறுத்தைகள் இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். மே 2025க்குள் போட்ஸ்வானாவிலிருந்து நான்கு சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டம் உள்ளது.
இதன் பின்னர், மேலும் நான்கு சிறுத்தைகள் கொண்டு வரப்படும். தற்போது, இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது” என்று NTCA அதிகாரிகள் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுத்தை திட்டத்திற்காக இதுவரை ரூ.112 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீட்டா திட்டத்தின் கீழ், காந்தி சாகர் சரணாலயத்திலும் சிறுத்தைகள் இப்போது படிப்படியாக இடமாற்றம் செய்யப்படும். காந்தி சாகர் சரணாலயம் ராஜஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. எனவே மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையேயான சிறுத்தை பாதுகாப்புப் பகுதியை நிறுவுவதற்கான கொள்கை ரீதியான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குனோ தேசிய பூங்காவில் தற்போது 26 சிறுத்தைகள் இருப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 16 திறந்தவெளி காட்டில் மற்றும் 10 மறுவாழ்வு மையத்தில் (அடைப்புகள்) உள்ளன. சிறுத்தைகளை கண்காணிக்க சென்சார் காலர் ஐடிகளைப் பயன்படுத்தி 24 மணி நேர கண்காணிப்பு நடைமுறையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண் சிறுத்தைகள் ஜ்வாலா, ஆஷா, காமினி மற்றும் வீரா ஆகியவை குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளில் கே.என்.பி.யில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.