கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டதையடுத்து அதனை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பாக விட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதி , தேவன் எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அந்தப் பகுதியில் தேடுதல் பணியை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக வனத்துறையினர் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை இன்று காலை சிக்கியது.