இஸ்ரேலின் தாக்குதலால் பற்றி எரியும் #Lebanon | 700ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனால் இஸ்ரேல் சைபர் தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர் கருவிகள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் கடந்த 23ம் தேதி லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் நடத்தபட்ட தாக்குதலில் 81 பேர் பலியானதாகவும், இதனால் மொத்த பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 92 பேர். கொல்லப்பட்டதுடன், 153 பேர் காயமடைந்தனர். கடந்த செப்.23ம் தேதி முதல் தற்போது வரை லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.