கடைசி சோமவார தினம் - குற்றாலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடைசி சோமாவர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் செழிக்கும் என ஐதீகம். அன்றைய தினம் சோமவார தினமாக கடைபிடிக்கப்பட்டு ஏராளமான பெண்கள் புனித ஸ்தலங்களில் நீராடி விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக சோமவார தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவிகளில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடி மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம், திருமண பாக்கியம் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளுடன் அரசடி பிள்ளையாரை மூன்று முறை சுற்றி வந்து நாக கன்னிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.