உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் - ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!
உத்தரகண்ட் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண் சரிவால் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்:இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு
சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் முயற்சியாக, பெரிய குழாயைச் செலுத்தும் பணியில் மீட்புக் குழு இறங்கியது.
40 தொழிலாளர்களை மீட்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 3-வது நாளாக ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு அந்தக் குழாய் வழியாக உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தரகண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சிறப்புக் குழு சுரங்கப்பாதை மற்றும் அதற்கு மேல் உள்ள மலைப்பகுதியை ஆய்வு செய்து வருகிறது.
உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரயான மணிகாந்த் மிஸ்ரா விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் பேசியதாகவும், 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சுரங்க பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மிஸ்ரா கூறினார்.