பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், இந்த நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலச்சரிவில் கட்டடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.