லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நிலமோசடி தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், ரூ. 70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதையும் படியுங்கள்: போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி (11.04.2023) அமலாக்கத்துறை சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் அப்போது இருவரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜன.29-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஜன.30-ம் தேதியும் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.