வெளியானது "லால் சலாம்" | ரஜினிகாந் மற்றும் தனுஷின் X தள பதிவு வைரல்...!
லால் சலாம் படம் இன்று வெளியான நிலையில், அதன் வெளியீட்டைக் குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந் மற்றும் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள X தள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து உள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.
இத்திரைப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், "என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என ரஜினிகாந்த் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் பொங்கலுக்கு வெளியாக இருந்த லால் சலாம் படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டைக் குறிப்பிட்டு “இன்று முதல் லால் சலாம்” என தனுஷ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.