குவைத் தீவிபத்து - சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!
குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார்.
குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது தமிழர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
குவைத் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் திடீரென தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இந்தக் கட்டடத்தில் சுமார் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பிரபுதேவா நடிக்கும் `பேட்ட ராப்’ திரைப்படத்தில் சன்னி லியோன் – வெளியானது புதிய அட்டேட்!
இந்த தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 50 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிபத்தில் காயமுற்று அல்-அடான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களை தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வருத்தத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :
"குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40 பேர் இறந்துள்ளதாகவும் 50-க்கும் மேலான நபர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான முழு உதவிகளையும் தூதரகம் செய்துதரும்"
இவ்வாறு அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.