400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா | ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!...
கோவையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஓதிமலை சாலையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அப்பணிகள் முடிவுற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா வை முன்னிட்டு இன்று காலை நவகிரக யாகம், மகா பூர்னாஹீதி,
காலசாந்தி உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்கி புனித நீர் யாக சாலையிலிருந்து மேளதாளத்துடன் கோவிலைச் சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர விமான கலசத்தில் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி
கரிவரதராஜப் பெருமாளை வணங்கினர். இந்த கும்பாபிஷேக விழாவில் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.