குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாள்தோறும் அம்பாள் பல்வேறு கோலத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலில் தன் வேடத்துடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிம்மம், எருமை மற்றும் சேவல் முகத்துடன் வந்த சூரனையும் அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர் சூலாயுதம் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.