Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு - விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

04:06 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த என்சிசி பயிற்சி முகாமில் பயிற்றுநராக இருந்த சிவராமன், அம்முகாமில் பயிற்சி பெற்று வந்த 8ம் வகுப்பு மாணவி நள்ளிரவில் தனியாக ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பாக பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதேபோல, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய என்சிசி பயின்றுநர் சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் வழக்கு தொடர்ந்தார். சூர்யபிரகாசம் தொடர்ந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையின் விசாரணை அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை தவிர மற்ற அனைத்து விவரங்களையும் கூறி அடையாளத்தை அம்பலப்படுத்தி விட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இதுவரை எந்த நிவாரணமும் அரசு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும் எனவும், பள்ளியின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிற்பகல் 2:15க்கு தள்ளிவைத்தனர்.

அதன்படி பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விசாரணை அறிக்கையை செப் 4-ம் தேதி தாக்கல் செய்யவும், அதேபோல் பலியான சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் தாக்கல் செய்யவும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கும், அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பள்ளியை ஆய்வு செய்து மாணவிகள், பெற்றோர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அதை விரைவு நீதிமன்றம் பரிசீலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 12 மாணவிகளுக்கும் பல்நோக்கு விசாரணைக்குழு, மனநல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், சிவராமனின் தந்தை மதுபோதையில் விழுந்து இறக்கவில்லை எனவும், சர்க்கரை நோயால் வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Chennaimadras highcourtMHCNCCNews7Tamilnews7TamilUpdatesSexual harassmentTN Govt
Advertisement
Next Article