“இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” - அமைச்சர் சேகர்பாபு..
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றது போல தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது, அரசு ஆம்னி பேருந்து ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை சூளை, அங்காளம்மன் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,சென்னை மேயர் பிரியா ஆகியோர் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு தெரிவித்ததாவது..
” முதல்வர் திட்டம் மூலம் மக்களுடைய தேவைகளை அறிந்து கோரிக்கைகளை பதிவு செய்து உடனடியாக தீர்வு செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசோடு திராவிட கழகமும் கைகோர்த்து நிற்கிறது. நிலுவையிலுள்ள மிக்ஜாம் புயல் நிவாரண மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் இனத்தால், மதத்தால் தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றத்தையே அடைந்தார்கள். யாருடைய அனுமதியையும் பெறாமல் திருக்கோயில்களில் குண்டர்கள் போல எல்.இ.டி திரையை அமைத்து கலவரத்தை செய்துள்ளனர். மதரீதியான, இனரீதியான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது. மத ரீதியான, இனரீதியான பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான தீர்வை தருவார்கள்.
அண்ணாமலை ஒரு துண்டு பிரசுரமோ, கொடியோ, பொதுக்கூட்டமோ, எதுவும் செய்யாதவர் அவருக்கெல்லாம் மாநாட்டை பற்றி ஒன்றும் தெரியாது. விதிக்கப்படாத தடையை விதித்தோம் என்று பொய் பிரச்சாரம் பாஜகவினர் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் பல்வேறு மக்கள்கள் திராவிட அரசு மூலம் அன்னதான திட்டத்தை பயன்பெற்று வருகிறார்கள்.
ஆன்மீக பக்தர்கள் தமிழ்நாடு அரசை மனநிறைவோடு பாராட்டுகிறார்கள். நாளை தைப்பூசத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலும் அன்னதானத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரசு கூறுவதை கேட்டால்தான் ஆம்னி பேருந்து ஊழியர்களுடன் தமிழ்நாடு அரசு நல்லுறவில் இருக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டியுள்ளோம். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தேவைகள் அனைத்தும் கிளாம்பக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க இன்றிலிருந்து முழுமையாக தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.