#Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் - நடந்தது என்ன?
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்ததால் சிறுவன் காயமடைந்துள்ளார்.
நாகர்கோவில் - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், இன்று காலை வாஞ்சிமணியாச்சி வந்தது. அப்போது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ் - புவிதா மற்றும் இவர்களது 4 வயது மகனான ஜெயின் சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் ஏறினர்.
தங்களுக்கான படுக்கைகளுக்கு சென்ற அவர்கள், சிறுவன் ஜெயின்சன்னை கீழ் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்த போது, சிறுவன் ஜெயின்சன் படுத்திருந்த படுக்கைக்கு மேல் இருந்த நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்தது.
நடுப்படுக்கை திடீரென விழந்ததால், கீழே உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஜெயின் சன் படுகாயம் அடைந்தார். சிறுவனின் பெற்றோரும், அருகில் இருந்த மற்ற பயணிகளும் உடனடியாக நடுப்படுக்கையை தூக்கி சிறுவனை மீட்டனர். இருப்பினும் அந்த சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : அதிமுக 53-வது ஆண்டு விழா - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
இதனையடுத்து, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், உடனடியாக மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதற்குள் அந்த ரயில் மதுரை வந்துவிட்டது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஜெயின்சன்னுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.