விழுப்புரம் | ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு - 3 பேர் காயம்!
விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் பைபர் படகு சிக்கி கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மீனவ பகுதியான நடுக்குப்பத்தை சேர்ந்தவர், ஐயப்பன் (35). இவர், தனது பைபர் படகில் அதே குப்பத்தைச் சேர்ந்தவர் தேசப்பன் (30), மற்றும் விஜயகுமார் (31). நேற்று மாலை வழக்கம் போல் இவர்கள் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். கரையில், இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் ராட்சத அலை வந்ததில் இவர்கள் சென்ற படகு சிக்கியது.
தொடர்ந்து, அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக படகை நோக்கி வந்ததாலும் படகின் இன்ஜின் திடீரென நின்றதாலும் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். கரையில் இருந்தவர்கள் கயிற்றின் உதவி மூலம் 3 பேரையும் காப்பாற்றினர். இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை ஒதுங்கிய படகை கயிறு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து, வந்த கோட்டக்குப்பம் போலீஸ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி பார்த்திபன் ஆகியோர் வந்து காயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.