Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

07:33 AM Apr 10, 2024 IST | Web Editor
Advertisement

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக புகழ் பெற்ற கூவாகம்
கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று (ஏப்.09) கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணா நகர், சிவாலயங்குளம், கொரட்டூர், பெரும்பாக்கம் போன்ற 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் படையல் செய்த கஞ்சி மற்றும் கூழ் குடங்களை மேலத்தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் கோயிலில் வைத்து படையல் இட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கண் திறந்தல் நிகழ்ச்சி வரும் 23 ஆம் இரவு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து அரவான் சுவாமியை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வும், மறுநாள் அரவான் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பெரு நகரங்களில் இருந்து சிறப்பு
பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதில் திருநங்கைகள் மட்டுமின்றி
பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து
வேண்டுதலை நிவர்த்தி செய்வார்கள்.

இத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட மூன்று மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான தருமர் பட்டாபிஷேகம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  அன்றுடன் 18 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags :
#koothandavar templechithirai thiruvizhadevoteesKoothandavar Chithirai ThiruvizhaKoovagam Koothandavar Temple
Advertisement
Next Article