Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkattaDoctorMurder - “தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது” - குடியரசுத்தலைவர் ஆதங்கம்!

04:42 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,  கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. எய்ம்ஸ் மற்றும் சஃப்தா் ஜங் உள்பட டெல்லியின் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் (ஆர்டிஏ), டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் 11 நாட்கள் நடத்திவந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

தொடர்ந்து பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு பொறுப்பேற்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதனை வலியுறுத்தி நேற்று (ஆக. 27) கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து இன்று (ஆக. 28) மேற்கு வங்கம் முழுவதும் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்கம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிக் கேட்டு மக்கள் போராடி கொண்டிருக்கும்போது குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவதாகவும், பெண்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற குற்றங்களே போதும் எனவும் தெரிவித்துள்ளார். தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது என்று குடியரசுத் தலைவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Tags :
CBIDoctor MurderDraupathi MurmuKolkataNews7Tamilnews7TamilUpdatesStop HarassmentSupreme courtWest bengal
Advertisement
Next Article